Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மார்ச் (ஹி.ச.)
சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்து வரும் மாணவி பிரியதர்ஷினி, மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 2023 நடைபெற்ற ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி படித்து தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
பிளஸ் டூ தேர்ச்சி பெற்றதில், தான் எழுதிய தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான விடைத்தாள்களின் நகல்களை அரசு தேர்வுகள் இயக்க பொது தகவல் அலுவலரிடம் கேட்டதாகவும், ஆனால் தேர்வுகள் இயக்ககம் தேர்வு முடிந்த ஐந்து நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது என்றும் எனவே அதற்கு வழிவகை ஏதும் இல்லை என தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் வி பி ஆர் இளம்பருதி, உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி திருத்தப்பட்ட விடைத்தாள்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி தகவல் ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே விடைத்தாள்களை நகல்களை கேட்டு பெற இச்சட்டத்தின் படி மனுதாரருக்கு உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி அரசு தேர்வக இயக்ககத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தியோ அல்லது தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைக் கட்டண விதிகளின்படி பக்கத்திற்கு இரண்டு ரூபாய் வீதம் கட்டணம் செலுத்திய மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகங்களை பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார் .
மேலும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் சட்டமே மேலானது என்று கோட்பாட்டின் அடிப்படையில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 இல் மாண்பை நிலைநிறுத்தும் வகையில், இனி வருங்காலங்களில் மாணவர்கள் தாங்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களின் நகலினை அரசு தேர்வுகள் இயக்கம் எவ்வளவு மாதங்கள் பராமரிக்கிறதோ அந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பக்கத்திற்கு இரண்டு ரூபாய் வீதம் செலுத்தி நகல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்ட அவர், இது குறித்து மாணவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ