Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 13 மார்ச் (ஹி.ச)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை சிறுமுகை ஆகிய பகுதிகளில், பல விவசாயிகள் கரும்பு பயிர் செய்துள்ளனர்.ஆறு, வாய்க்கால் பாசனம் ஏதும் இல்லாததால், கிணற்று நீரை நம்பி மட்டுமே விவசாயம் செய்கின்றனர்.
நன்கு விளைந்த கரும்பு அறுவடை செய்து சர்க்கரை மில்லுக்கு அனுப்புகின்றனர். சில ஆண்டுகளாக, இப்பகுதி விவசாய நிலங்களில் நுழையும் காட்டுப் பன்றிகள், பயிர்களை சேதப்படுத்துகின்றன.
இதுகுறித்து, காரமடை பனப்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
நன்கு விளைந்த கரும்பை அறுவடை செய்ய, போதிய ஆட்கள் கிடைக்கவில்லை. ஒரு மாதமாக, வெள்ளியங்காடு செல்லும் வழியில், தோகைமலை பகுதியில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள், கரும்பு தோட்டத்தில் நுழைந்து சேதப்படுத்தி வருகின்றன. மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர், தோட்டத்தில் முகாமிடும் காட்டுப் பன்றிகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பசு தீவனப் பயிர்கள் நிலப்பகுதியில் காட்டுப் பன்றிகள் நுழைந்தால், அந்த தீவனப் பயிர்களில் இருந்து வரும் ஒருவித வாசத்தால், மாடுகள் தீவனப் பயிர்களை உட்கொள்வதில்லை. கரும்பு தோட்டத்தில் நுழையும் பன்றிகள், பதுங்க வசதியாக இருப்பதால், நிரந்தரமாக தோட்டத்திலேயே தங்கியுள்ளன.
மகசூல் அதிகளவில் பாதிக்கிறது. தோட்டக்கலை, வேளாண் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட கரும்புகளை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b