Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 13 மார்ச் (ஹி.ச.)
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் அமைந்துள்ள ஆட்டுப்பாறையைச் சேர்ந்தவர் சங்கிலி. இவருடைய மனைவி பாண்டியம்மாள் (40). இவர் கடந்த மார்ச் 8ஆம் தேதி தேனி மாவட்டம் கொம்புக்காரன் புலியூர் கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பாண்டியம்மாளை மீட்ட பொதுமக்கள், அவரை அவசர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தலைக்காயப்பிரிவு 101-ICU வார்டில் தீவிர சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி மார்ச் 10ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர்.
எனவே, பாண்டியம்மாளின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த நிலையில், அவருடைய கணவர் சங்கிலியிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கல்லீரலும், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தலா ஒரு சிறுநீரகமும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கருவிழிகளும் தானமாக வழங்கப்பட்டன.
இதுகுறித்து ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் கூறுகையில்,
பாண்டியம்மாளின் உடலை தீவிர விபத்து சிகிச்சைப்பிரிவில் உடற்கூராய்வு செய்து, அரசு ராஜாஜி மருத்துவமனையின் நிர்வாகம் சார்பாக இறுதி மரியாதை செய்யப்பட்டது. பின்னர், அவரது குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
பாண்டியம்மாளின் உடல் உறுப்பு தானத்தால் 4 பேர் பயனடைந்துள்ளனர்.
உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு தமிழக அரசு சார்பாக இறுதி மரியாதை செய்வதற்காக, தேனி மாவட்ட நிர்வாகத்திடம் பாண்டியம்மாள் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN