Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 13 மார்ச் (ஹி.ச)
தூத்துக்குடி உள்ளூர் திட்டப் பகுதிக்கான புதிய முழுமைத் திட்டம் - 2045
(Master Plan-2045) திட்டத்திற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 34 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய 463.62 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், தூத்துக்குடி உள்ளூர் திட்டப் பகுதிக்கான 'முழுமைத் திட்டம்-2045' தயார் செய்யப்பட்டு அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.
தொழில்துறை வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்கால மக்கள் தொகை பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு தற்போது தமிழக அரசு ஆணை பிறப்பித்து ஒப்புதல் அளித்துள்ளது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த முழுமைத் திட்டத்தின் விபரங்களை பொதுமக்கள் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உள்ளூர் திட்டக் குழுமம் / மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று பார்வையிடலாம்.
நேரில் வர இயலாதவர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தூத்துக்குடி மக்கள் இத்திட்டத்தைத் தெரிந்துகொள்ள வசதியாக, https://thoothukudilpa.com/ என்ற இணையதள முகவரியிலும் இத்திட்டத்தின் வரைபடம் மற்றும் இணைப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அடுத்த 20 ஆண்டுகால தூத்துக்குடியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் இந்த மாஸ்டர் பிளான் திட்டம், மாவட்டத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய மைல்கல்லாக அமையும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b