Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மார்ச் (ஹி.ச.)
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பி.காளியம்மாள் தன்னுடைய அதிரடி பேச்சால் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 60,000 வாக்குகள் பெற்றார்.
அந்தத் தேர்தலின்போது அவரின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில், அவர் கடந்த பிப்ரவரியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், இன்று காலை அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காளியம்மாள் கூறியதாவது:
அரசியல் கட்சியில் இருந்து விலகி, ஒராண்டுக்கு மேல் மக்கள் அரசியலில் இருந்தேன்.
இன்று அரசியல் பயணமாக அதிமுகவில் இணைந்துள்ளேன்.
இந்த தேர்தலில் தொடங்கி மீண்டும் எனது அரசியல் பயணம் தொடரும். நான் அதிமுகவை தேர்வு செய்ததுக்கு 2 காரணங்கள் உள்ளது.
அதிமுகவில் தலைமை பொறுப்புக்கு எளிய குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறார்.
ஜனநாயக சூழல் இருப்பதால் அதிமுகவை தேர்வு செய்து இருக்கிறேன்.
ஒரு தமிழனின் தலைமையின் கீழ் இயங்க அதிமுகவில் இணைந்துள்ளேன்.
ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களும் சேர்ந்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்.
இந்த முடிவை நான் தனித்து எடுக்கவில்லை. இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலையில், மக்கள் தினமும் பிரச்னைகளை சந்தித்து கொண்டே இருக்கிறார்கள்.
விலைவாசி உயர்வில் தொடங்கி, சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் நிறைய பிரச்னைகள் இருந்து கொண்டே இருக்கிறது.
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
அதற்கான பரிசை வரும் தேர்தல் தரும். முடிவு எடுப்பதில் ஏதும் தாமதம் ஏற்படவில்லை. நான் மக்கள் களத்தில் இருந்தேன்.
அரசியல் கட்சியில் இருந்து விலகினேன்.
மக்கள் அரசியலில் இருந்து விலகவில்லை. ஓராண்டு காலமாக அரசியல் களத்தில் இருந்து விலகியதற்கு காரணம் ஓய்வு தேவைப்பட்டது.
எனது குழந்தைகளுடன் நேரம் செலவிட விரும்பினேன்.
2010ம் ஆண்டில் இருந்தே இபிஎஸ்ஐ தெரியும். 2010ல் அதிமுகவில் கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருந்துள்ளேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கும் வரை இந்த தவறுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
மீண்டும் அந்த தவறை செய்யும் போதும் பயம் வரும் அளவுக்கு தண்டனைகள் கடுமையாக்க வேண்டும்.
அப்போது தான் பெண்களுக்கு எதிரான குற்றம் சம்பவங்கள் குறையும்.
இவ்வாறு காளியம்மாள் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b