தி.மு.க. -வில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தேர்தல் பிரச்சாரம் இன்று முதல் தொடக்கம்
தென்காசி, 13 மார்ச் (ஹி.ச.) அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்ப
திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்


தென்காசி, 13 மார்ச் (ஹி.ச.)

அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி தேர்தல் சுற்றுப்பயண பணியை தென்காசி மாவட்டத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று தொடங்கி உள்ளார்.

தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை தி.மு.க. நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ். ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதில் தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது,

எடப்பாடி பழனிசாமி ஏன் இவ்வளவு கத்துகிறார் என்று தெரியவில்லை.

ஒரு கருத்தை பக்குவமாக, மக்கள் ஏற்றுக்கொள்ளும்விதத்தில் சொல்ல வேண்டும். கத்திப் பேசினால் மக்கள் கேட்பார்கள் என்று நினைக்கிறார். அது தவறு.

அந்த நபரின் பெயரைச் சொல்லக்கூட நான் விரும்பவில்லை. ஏனென்றால் ஊர்ந்து சென்று பதவியைப் பெற்று காலைத் தொட்டு, பதவி தந்தவருக்கே நன்றி இல்லை. ஒரு நன்றியில்லாத நபர் இன்று அரசியலில் இருக்கிறார் என்றால் அது அவராக மட்டுமே இருக்க முடியும்.

தான் திறமையாக ஆட்சி செய்வேன், தன்னை முதலமைச்சராக்க வேண்டும் என்று சில கைக்கூலிகளை வைத்துக்கொண்டு கட்சித் தலைமையிடம் சொல்லவைத்தார்.

ஆனால், மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்பதையும் மாற்றி பொதுச் செயலாளர் ஆனார்.

தன்னை பொதுச் செயலாளராக நியமித்துக்கொண்ட ஒரே நபர் அவராகத்தான் இருப்பார்.

அவர் வந்தபின்னர் 10 தேர்தலில் தோல்வியைத்தான் அடைந்தார். மக்கள் ஏற்றுக்கொள்ளமால்தான் அவர் தோல்வி அடைந்தார்.

அவர் கொடுக்கும் தேர்தல் அறிக்கைகள் எல்லாம் பொய். மக்கள் காதுகொடுத்து கேட்க மறுக்கிறார்கள்.

அவருக்கு பதவி கொடுத்தவருக்கு நன்றி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவரை பழித்துப் பேசலாமா? துரோகம் இழைத்துவிட்டார். நன்றி மறந்தவர்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். வரும் தேர்தலிலும் அதுதான் நடக்கும்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இன்று மாலை 4 மணிக்கு கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சன்புதூர் சேனைத்தலைவர் சமுதாய மண்டபத்திலும், இரவு 7 மணிக்கு சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியிலும் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்துகிறார்.

தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், பரமகுடி, திருவாடானை பகுதிகளில் நிர்வாகிகளை சந்திக்கிறார்.

தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தின் ஓட்டுகள் அதிகமாக இருக்கும் நிலையில், அந்த ஓட்டுகளை ஒருங்கிணைத்து அதனை தி.மு.க.வுக்கு கொண்டு வருவதற்காக ஓ.பி.எஸ். தென்மாவட்டங்களில் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b