விளாத்திகுளம் மாணவி படுகொலை விவகாரத்தைக் கண்டித்து அதிமுகவினர் வாயில் கருப்பு கொடி கட்டி கவன ஈர்ப்பு போராட்டம்
மதுரை, 14 மார்ச் (ஹி.ச) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட 17 வயது மாணவிக்கு நிவாரணம் கோரி, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அருகே வாயில் கருப்பு கொடி கட்டி க
AIADMK members staged


மதுரை, 14 மார்ச் (ஹி.ச)

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட 17 வயது மாணவிக்கு நிவாரணம் கோரி, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அருகே வாயில் கருப்பு கொடி கட்டி கவன ஈர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்த வி.வி.ஆர்.ராஜ்சத்யன் கூறியதாவது,

நான் இங்கு அரசியல்வாதியாக வரவில்லை. ஒரு சகோதரனாக, தந்தையாக ஒரு சிறுமிக்கு ஏற்பட்ட துயரத்துக்கு நீதி கேட்டு வந்துள்ளேன்.

இந்தச் சம்பவத்தை பார்க்கும்போது ஒரு பெண் குழந்தை பட்டப்பகலில் வெளியே நட முடியாத அளவில் வெட்கக்கேடாக தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு உள்ளது.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதற்கு அடிப்படை காரணம், போதைப் பொருள் கலாச்சாரமாகும். போதைப்பொருகள் கடத்தல், விநியோகத்தை காவல் துறை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டெல்லியில் நடைபெற்ற நிர்பயா சம்பவத்தை போல தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளதால், தூத்துக்குடி நிர்பயா என்ற பெயரில் கவன ஈர்ப்பு போராட்டத்தை நாங்கள் நடத்தி வருகிறோம்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் 9.30 மணிக்கு குழந்தை வரவில்லை என்று புகார் கொடுக்க செல்கிறார்கள்.

ஆனால் காவல் துறை “அது எங்க லிமிட் இல்லை” என்று அலட்சியம் காட்டி, சந்தேக கண்ணுடன் மிகவும் மோசமாக வார்த்தைகளை கூறியுள்ளனர்.

அந்த காவல் துறையினர் மீது சஸ்பெண்ட் என்று கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் முதல்வர் கண்டுகொள்ளாமல், தேர்தலுக்கு போட்டோ சூட்டும், கன்டென்ட் கிரியேட்டும் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால், அதிமுக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தின் மூலமாகவும் இதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், முதல்வரோ பெண் குழந்தைகளின் தொடர் மரணங்களையும், பாலியல் குற்றச் சம்பவங்களையும் கண்டு கொள்ளாமல், தேர்தல் ஆதாயத்துக்காக தங்களுக்கு வேண்டிய மீம்ஸ் கருத்துகளை போட்டு ரிலீஸ்களை வெளியிடுகிறார்.

இன்றைக்கு வெவ்வெறு இடங்களில் சிறுமிகளுக்கு நடக்கும் இந்த கொடூரம், நாளைக்கு யாருக்கு வேண்டுமென்றாலும் நடக்கலாம்.

ஆனால், திமுக கூட்டணி கட்சிகள், கடந்து ஐந்து ஆண்டுகளாக மக்களுக்காக போராடாமல் திமுகவை பாதுகாப்பதிலே குறியாக உள்ளன. திமுகவுக்கு பயந்து மக்களுக்காக குரல் கொடுக்க பயப்படுகிறார்கள். அவர்கள், மக்கள் பக்கம் நிற்காமல் வெறும் ‘சீட்’க்கும், நோட்டுக்கும் மட்டுமே இந்த ஐந்து ஆண்டு காலத்தை கழித்துவிட்டதால், அவர்கள் நிற்கும் தொகுதிகள் அனைத்திலும் மக்கள் தோற்கடிப்பார்கள்.

தூத்துக்குடிக்கு தானும் செல்லாமல், தன் மகனையும் அனுப்பி வைக்காமல், தனது தங்கை கனிமொழியை வைத்து முதல்வர் ஸ்டாலின் சரிசெய்ய முயன்றார். ஆனால், அப்பகுதி மக்கள் அவரை விரட்டி விட்டுள்ளனர். இந்த தேர்தலில் மக்கள் நிரந்தரமாக அவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீட்டிற்கு விரட்டுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b