Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 14 மார்ச் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் என்ற டெலிசன் (26), இருவரை வாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது தப்பியோட முயன்று பாலத்தில் இருந்து குதித்ததால், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறி, மார்ச் 7-ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவரை காவல்துறையினர் அனுமதித்தனர்.
ஆனால், மறுநாளே சிகிச்சை பலனளிக்காமல் ஆகாஷ் உயிரிழந்தார். இறப்பதற்கு முன், மானாமதுரை நீதித்துறை நடுவரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், தனது காலை காவல் துறையினர் இரும்புக் கம்பியால் தாக்கி உடைத்ததாக தெரிவித்திருந்தார்.
கால் உடைந்த ஆகாஷ் எப்படி தப்பியோடி, பாலத்தில் இருந்து கீழே குதித்தார் என்ற கேள்வி வலுத்தது.
இதற்கிடையே, ஆகாஷ் மரணத்திற்கு காரணமான காவல் துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, கடந்த 5 நாட்களாக அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ராமேஸ்வரம்-மானாமதுரை நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தான் ஆகாஷின் உடற்கூராய்வு அறிக்கை வெளியானது.
அதில், அவரது உடலில் 28 இடங்களில் காயங்கள் இருந்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து இந்தச் சம்பவம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மானாமதுரை காவல் நிலைய ஆய்வாளர் திலீபனை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி மணிவண்ணன் உத்தரவிட்டார்.
அதே போல், உதவி ஆய்வாளர் குகன் (மானாமதுரை), தலைமைக் காவலர்கள் தேவேந்திரன் (சிவகங்கை), சரத்குமார் (சிப்காட்), முதல்நிலை காவலர்கள் காளீஸ்வரன் (மானாமதுரை), மனோகரன் (திருப்புவனம்) ஆகிய 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டுப் புகாரின் பேரில் விசாரணைக்காகக் அழைத்துச் செல்லப்பட்டு காவல் துறையினர் கொடூரமாகத் தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அஜித்குமார் உடல் மீதான 44 காயங்கள் மற்றும் சிபிஐ விசாரணையின் அடிப்படையில், இது திட்டமிட்ட கொலை என குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், இதேபோன்று மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN