Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மார்ச் (ஹி.ச)
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில், மாணவர்களின் புதுமைப் படைப்புகள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான “டெல்டா எக்ஸ்போ 2026 கண்காட்சி இன்று சிறப்பாகத் தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த விழாவினை தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முறைப்படி தொடங்கி வைத்தார்.
இந்தத் தொடக்க விழாவில் ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, பேராசிரியர்கள், மாணவர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முன்னணி முதலீட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பொறுப்பு ஆளுநர் அர்லேகர்,
வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. சென்னை ஐஐடி உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாகத் திகழ்கிறது.
இங்கிருந்து வெளியாகும் கண்டுபிடிப்புகள் சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகின்றன, என்று பாராட்டினார்.
மேலும், மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை வெறும் சுய முன்னேற்றத்திற்காக மட்டும் கருதாமல், நாடு மற்றும் சமூக நலனுக்காகவும் அர்ப்பணிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
மாணவர்களின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் சாமானிய மக்களுக்கும் பயனுள்ள வகையில் அமைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Hindusthan Samachar / ANANDHAN