Enter your Email Address to subscribe to our newsletters

தெலுங்கானா, 14 மார்ச் (ஹி.ச.)
ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் ஓல்டு போயேன்பள்ளி
பகுதியை சேர்ந்த பெண் சுதாராணி உடல்நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு
அனுமதிக்கப்பட்டிருந்தார்.
திடீரென்று சுதாராணி இருந்த அறைக்கு வந்த டாக்டர் வேஷம் போட்ட பெண் ஒருவர், சுதா ராணிக்கு பரிசோதனை நடத்த வேண்டும் அனைவரும் வெளியே செல்லுங்கள் என்று அவருடன் இருந்த உறவினர்களை அங்கிருந்து வெளியேற்றினார்.
பின்னர் பரிசோதனை செய்வது போல் நடிக்க அந்தப் பெண் சுதா ராணிக்கு மயக்க
மருந்து கொடுத்து மயங்க செய்தார்.
தொடர்ந்து அவர் அணிந்திருந்த சுமார் 15 சவரன் எடையுள்ள தங்க ஆபரணங்களை அகற்றி
எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.
போகும்போது சுதாராணி உறவினர்களிடம் அவர்
தூங்கிக் கொண்டிருக்கிறார். தூங்குவதற்காக மருந்து கொடுத்திருக்கிறேன். அவரை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று கூறி சென்று விட்டார்.
எனவே அறைக்குள் சென்ற சுதாரணியின் உறவினர்கள் அவரை தொந்தரவு செய்யவில்லை.
நீண்ட நேரம் ஆகியும் சுதா ராணி எழாத காரணத்தால் சந்தேகம் அடைந்த அவருடைய உறவினர்கள் போர்வை விலக்கிப் பார்த்தபோது அவர் அணிந்திருந்த ஆபரணங்களை
காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திலும் புகார்
அளித்தனர்.
மருத்துவமனை நிர்வாகம் வந்த பெண் யார் என்றே எங்களுக்கு தெரியாது என்று கை விரித்து விட்டது.
தொடர்ந்து மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவு
காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம பெண் ஒருவர் மருத்துவமனைக்குள் வந்து நோயாளி அணிந்திருந்த ஆபரணங்களை கொள்ளையடித்து செல்வது தெரிய வந்தது.
இந்த சம்பவம் பற்றி மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில்
பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கைப்பற்றி டாக்டர் வேஷம் போட்டு கொள்ளையடித்து சென்ற மர்ம பெண்ணை தீவிரமாக
தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam