Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 14 மார்ச் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளையார்புரம் அன்னம் வலை கம்பெனி தெரு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் இவரது மனைவி கலாவதி (வயது 42). கூலித் தொழிலாளி.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் மூத்த மகள் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
இரண்டாவது மகள் சுருதி (வயது 19) தனியார் கல்லூரியில் பி .காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் மேற்கு நெய்யூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் அபிலாஷ் (வயது 19) என்பவரை காதலித்து உள்ளார்.
இந்த நிலையில் சுருதியின் தாயார் கலாவதி இரண்டு மகள்களின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகளில் 10 பவுன் தங்க நகைகள் திடீரென்று காணாமல் போனது.
இதுகுறித்து சுருதியிடம் தாய் கேட்டபோது, அவர் தனது காதலன் அபிலாஷ் அவசர தேவைக்காக பணம் கேட்டதால் நகைகளை கொடுத்ததாக தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் நகைகளை கேட்டு மகளிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் தாய் மகளுக்கு இடையே தினமும் வாய் தகராறு நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று சுருதியின் வீட்டுக்கு காதலனாக அபிலாஷ் வந்துள்ளார்.
இதனை பார்த்த சுருதியின் தாயார் கலாவதி நகைகள் எங்கே என்று கேட்டுள்ளார்.
பின்பு அவர்களுக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த காதலன் அபிலாஷ் அருகில் இருந்த உருட்டுக்கட்டையால் தனது காதலியின் தாயாரை பின் தலையில் தாக்கியுள்ளார் இதில் படுகாயம் அடைந்து கீழே விழுந்த கலாவதி இருவரும் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
கலாவதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கலாவதி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்தவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு கலாவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த கொலை முயற்சி சம்பவம் குறித்து கலாவதி அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுருதி அபிலாஷ் இருவரையும் கைது செய்தனர்.
தாயை தனது காதலனுடன் கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam