Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 14 மார்ச் (ஹி.ச.)
மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி 8-ம் தேதி (08.02.2026), மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் மயிலாடுதுறை, மாப்படுகை, கவரத்தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் குகன் (24) என்பது தெரியவந்தது.
மேலும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வருவதை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரைச் சோதனை செய்தபோது, விற்பனைக்காக அவர் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர், குகன் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
கைது செய்யப்பட்ட குகன் மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
இவர் தொடர்ந்து இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், இவருடைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது அவசியம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின், குகனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.
அந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், கடந்த 12.03.2026 அன்று குகனைத் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
மத்திய சிறையில் அடைப்பு
ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, இன்று மயிலாடு துறை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர், குகனை கடலூர் மத்திய சிறையில் கொண்டு அடைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN