127 திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய முதியவர் கைது!
திருவாரூர், 14 மார்ச் (ஹி.ச.) திருவாரூர் நகர் பனகல் சாலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. கடை உரிமையாளரான, ஹாஜி முகமது என்பவர் சம்பவத்தன்று அதிகாலை வழக்கம் போலக் கடையைத் திறக்க வந்தபோது, சூப்பர் மார்க்கெட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, ஷட்டர்
Theft Case


திருவாரூர், 14 மார்ச் (ஹி.ச.)

திருவாரூர் நகர் பனகல் சாலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது.

கடை உரிமையாளரான, ஹாஜி முகமது என்பவர் சம்பவத்தன்று அதிகாலை வழக்கம் போலக் கடையைத் திறக்க வந்தபோது, சூப்பர் மார்க்கெட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, ஷட்டர் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்பு, உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 4 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால், பதறிப்போன ஹாஜி உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்தனர்.

இதில், முகமூடி அணிந்து வந்த ஆசாமி ஒருவர் கடையின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த பணத்தைக் கொள்ளையடித்து சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.

கொள்ளையடிக்கும் சமயத்தில், முகமூடி ஆசாமி அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவை வேறொரு பக்கம் திருப்பி வைத்து விட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த வேறொரு சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இதையடுத்து, இந்த கட்சிகள் மற்றும் அந்த இடத்தில் இருந்த கைரேகை தடயங்களை வைத்து காவல்துறையினர் கொள்ளை ஆசாமியைத் தேடி வந்தனர்.

பின்னர், முகமூடியுடன் உள்ள அவரது புகைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள குற்றப் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, ஏற்கனவே உள்ள குற்றவாளிகளின் புகைப்படத்துடன் இந்த படத்தையும் அவர்கள் ஒப்பிட்டனர்.

இதன் மூலமாக அந்த ஆசாமியை அடையாளம் கண்டறிந்த காவல்துறையினர், அவரை தேடிப்பிடித்து கைது செய்தனர்.

பின்பு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில்,சிவகங்கை மாவட்டம் புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் காளிதாஸ் (59).

அவர் 1993-ல் இருந்து திருடுவதையே தொழிலாக வைத்திருப்பவர்.

சத்தம் இல்லாமல் பூட்டை உடைத்து களவாடும் யுக்தியைக் கையாண்டு, இதுவரை 127 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, திருடுவது, கைதாகி சிறைக்குச் செல்வது, ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் திருடுவது என வாடிக்கையாக திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN