Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மார்ச் (ஹி.ச.)
மேற்காசியப் போர் பதற்றம் எதிரொலியாக இந்தியாவில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, மாநிலத்தின் பல இடங்களில் உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டு வருவதால், காய்கறிகளுக்கான தேவை கணிசமாக குறைந்துள்ளது. இதனால், சந்தையில் வரத்து சீராக இருந்தாலும், விற்பனை மந்தமாகி 2,000 டன் காய்கறிகள் தேங்கியுள்ளன.
குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு, தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் 10,000 டன் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.
போர் சூழலால், சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகத்தில் தட்டுப்பாடு நிலவுவதால் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்பனை ஆகாமல் வீணாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இதுகுறித்து, கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முத்துக்குமார் கூறியதாவது,
சந்தைக்கு வழக்கம்போல் காய்கறி வரத்து உள்ளது. ஆனால், சமையல் எரிவாயு தட்டுப்பாடால் உணவகங்கள் செயல்படாததால், இரண்டாம் மற்றும் மூன்றாம் தர காய்கறிகள் அதிகமாக விற்பனையாகாமல் தேங்கி வருகின்றன.
மலிவு விலையில் விற்றாலும் வாங்க வருவோர் குறைந்துள்ளனர். குறிப்பாக கேரட், கோஸ், பீட்ரூட், கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் பெரிய இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b