Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு டிச.1-ம் தேதி முதல் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு குறித்து ஏற்படுத்தப்பட்ட குழுவினருடன், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் இதர சங்க நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இறுதியாக ஊழியர்களுக்கு, 2023-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி பெறும் ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வும், அதே நாளில் 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு பணிப் பலனாக, அந்த நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவீதம் ஊதிய உயர்வும் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது.
மேலும் 2023-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி 10 வருடங்கள் பணி முடித்த அலுவலர்களுக்கு, அந்த நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவீதம் பணிப் பலனாக வழங்குவது எனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும், அலுவலர்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை சிறப்புப்படி வழங்கவும் ஆணையிடப்படுகிறது.
இவ்வூதிய உயர்வு மூலம் ஏற்படும் நிலுவைத் தொகை 2023-ம் ஆண்டு டிச.1-ம் தேதி முதல் கருத்தியலாகக் கணக்கிட்டு, 2025-ம் ஆண்டு டிசம்பர் 1 முதல் பணப் பலன்கள் வழங்கவும். இடைப்பட்ட காலத்துக்கு 2023-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் 2025-ம் ஆண்டு நவ.30 வரை கருணைத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.500/- வீதம் கணக்கிட்டு 24 மாதங்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2025-ம் ஆண்டு டிச.1 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி வரை வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையை ஒரே தவணையாக வழங்கவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b