Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 15 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்க மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்து வருகிறது.
இதற்கான விண்ணப்பப் பதிவில் முக்கிய மாற்றங்கள் மற்றும் கால நீட்டிப்பு குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. சுகுமார் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
கடந்த 01.01.2026 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், விண்ணப்பதாரர்களின் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி ஆண்டு வருவாய் 50 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போது அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் வகையில், இந்த நிதித் தகுதி 20 லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாரத்நெட் திட்டப் பணிகள் தற்போது 96% நிறைவடைந்துள்ளன. 37 மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்டம் அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களைக் கொண்ட துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் மாவட்டம், அந்த நிறுவனம் அல்லது தனிநபர் செயல்படும் மாவட்டமாக இருக்க வேண்டும்.
இணையக் கேபிள்கள் (OFC) மற்றும் கருவிகளை (ONT) பராமரித்தல், தடையில்லா இணையச் சேவை மற்றும் பழுதுகளை விரைந்து சரிசெய்தல்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதள போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பாதுகாப்பு வைப்புத் தொகையாக 25,000 ரூபாய் (திரும்பப் பெறக்கூடியது) செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் பங்கீட்டாளர்கள், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 2,00,000 ரூபாய் பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்திய பின் பணி ஆணை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் இணையதள போர்டல் 10.04.2026 வரை செயலில் இருக்கும்.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள்:
ஏற்கனவே கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள் அதே வருவாய் உட்கோட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இருப்பினும், அதே மாவட்டத்தில் உள்ள பிற துணைப் பிரிவுகளுக்கு அவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம்.
மேலதிக விவரங்களுக்கு 044-24965595 என்ற உதவி மைய எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b