Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மார்ச் (ஹி.ச.)
சென்னையை அடுத்த பெருங்களத்தூர் அருகே ஊரப்பாக்கம், ஆதனூரைச் சேர்ந்த தம்பதி ஆனந்த் பிரகாஷ் (வயது 33)-அமலா சோஃபியா (வயது 31). ஆனந்த் பிரகாஷ் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த தம்பதியினர், குழந்தைப் பேறுக்காக மந்தைவெளியில் உள்ள தனியார் கருத்தரிப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்த நிலையில் அமலா சோஃபியா கருப்பையில் இருந்த நீர்க்கட்டியை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, நேற்று (மார்ச் 14) அந்த பெண்ணிற்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவர் சுயநினைவுக்கு திரும்புவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எனினும் அவர் எழுந்திருக்காததால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அமலா சோஃபியா உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.
இதையடுத்து, கதறி அழுத கணவர் ஆனந்த் பிரகாஷ் மற்றும் குடும்பத்தினர், சம்மந்தப்பட்ட கருத்தரிப்பு மையம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, அமலா சோஃபியாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வெளியே பெண்ணின் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த ராயப்பேட்டை காவல்துறை உதவி ஆணையர் இளங்கோவன் தலைமையிலான காவல்துறையினர், நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் கலைந்துச் சென்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN