சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் விதிகளை மீறி பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களால், மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு
சென்னை, 15 மார்ச் (ஹி.ச.) சென்னை பனையூர் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் மல்லிகா (60). இவர் இன்று காலை சுமார் 7 மணி அளவில், வீட்டு வேலைக்குச் செல்வதற்காகச் பனையூர் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்தச் சாலையில் சட்டவிரோதமாக அதிவேகமாக பைக்
Hs


சென்னை, 15 மார்ச் (ஹி.ச.)

சென்னை பனையூர் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் மல்லிகா (60). இவர் இன்று காலை சுமார் 7 மணி அளவில், வீட்டு வேலைக்குச் செல்வதற்காகச் பனையூர் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்தச் சாலையில் சட்டவிரோதமாக அதிவேகமாக பைக் ரேஸில் வந்த பைக் ஒன்று மல்லிகா மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் மல்லிகா தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கப் பலியானார்.

மோதிய வேகத்தில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நபர் கீழே விழுந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரைப் பிடித்தனர். ஆனால், பைக்கை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

பிடிபட்ட நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விபத்தால் ஆத்திரமடைந்த பனையூர் பொதுமக்கள், அப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடப்பதாகவும், பைக் ரேஸை கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த மூதாட்டியின் உடலைச் சாலையிலேயே வைத்துப் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கானத்தூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

மல்லிகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தப்பியோடிய பைக் ரேஸரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ