நெருங்கும் தேர்தல் - திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக மு.க. ஸ்டாலினை சந்தித்த கனிமொழி எம்பி!
சென்னை, 15 மார்ச் (ஹி.ச.) திமுக தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுவினர் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தி
Kanimozhi MK Stalin


சென்னை, 15 மார்ச் (ஹி.ச.)

திமுக தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுவினர் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

திமுக தேர்தல் அறிக்கை வெளியிடுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக மெகா கூட்டணியை அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது.

அதாவது, கடந்த தேர்லில் 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்த திமுக, இந்த தேர்தலில் 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் கதாநாயகன் என்று சொல்லப்படும் தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் கோவி.செழியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, தி.மு.க. அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன், சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டது.

திமுக தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுவினர் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடந்தது.

இதில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், தேர்தல் அறிக்கையில் என்னென்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார்.

உடனடியாக கனிமொழி எம்.பி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் அறிக்கையை எப்போது வெளியிடுவது என்பது தொடர்பாக அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN