1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூத்த தேவியின் சிற்பம் கண்டுபிடிப்பு
கள்ளக்குறிச்சி, 15 மார்ச் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் நகரத்தின் மேற்கில் அமைந்துள்ளது செஞ்சிக்குப்பம் கிராமம். இங்கு விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது சிங்கம் இடம்பெற்ற அரிய
Statue


கள்ளக்குறிச்சி, 15 மார்ச் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் நகரத்தின் மேற்கில் அமைந்துள்ளது செஞ்சிக்குப்பம் கிராமம்.

இங்கு விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார்.

அப்போது சிங்கம் இடம்பெற்ற அரிய மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டது.

இதுபற்றி ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது,

செஞ்சிக்குப்பம் ஏரிக்குள் சற்று சாய்ந்த நிலையில் பலகைக் கல்சிற்பம் காணப்படுகிறது.

இதனை உள்ளூர் மக்கள் 'துர்க்கை' என்று வழிபட்டு வருகின்றனர். ஆனால், இந்த சிற்பத்திற்கு உரியவர் ஜேஷ்டா என்று அழைக்கப்படும் மூத்த தேவியாவார்.

சுமார் 5 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

ஆசனத்தின் மீது கம்பீரமாக அமர்ந்த நிலையில் மூத்ததேவி காட்சியளிக்கிறார்.

வலது கை அபய முத்திரையுடனும் இடது கை ஆசனத்தின் மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன. மார்பில் தடித்த புரிநூல் தவழ்கிறது. அழகிய தலை அலங்காரம், காதணிகள், கழுத்தணி மற்றும் இடையாடை ஆகியவற்றுடன் கலை நயத்துடன் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

மூத்ததேவியின் மேலிரண்டு பக்கமும் அவரது மகன் மாந்தன், மகள் மாந்தி காட்டப்பட்டுள்ளனர். மாந்தியின் உருவம் அழகிய தலை அலங்காரத்துடன் இளவரசி போன்று காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இத்தெய்வத்தின் ஆயுதமான துடைப்பமும், காக்கைக் கொடியும் இதில் இடம் பெற்றுள்ளன. சிற்பத்தின் இரண்டு பக்கங்களிலும் முன்னங்கால்களை தூக்கிய நிலையில் இரண்டு சிங்கங்கள் காட்டப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

அரசர்கள்தான் சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பார்கள். மூத்ததேவியும் அவர்களுக்கு நிகரானவர் என்பதைக் குறிக்கும் வகையில் சிம்மம் காட்டப்பட்டிருக்கின்றன என்று மூத்த கல்வெட்டு ஆய்வாளர் பேராசிரியர் கோ.விஜய வேணுகோபால் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள மூத்ததேவி சிற்பங்களில் வேறெங்கும் சிங்கம் இடம்பெற்றதாக தெரியவில்லை. அந்த வகையில் செஞ்சிக்குப்பம் மூத்ததேவி சிற்பம் அரியதும் தனித்துவமானதும் ஆகும். பல்லவர் காலத்தை (கி.பி. 7 - 8 ஆம் நூற்றாண்டு) சேர்ந்த இந்தச் சிற்பம் 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த அரிய சிற்பத்தை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது உளுந்தாண்டார் கோயில் ச.சந்திரசேகரன், தி.ஒரத்தூர் சி.அனீஸ்வரன், சிவ.சதீஷ்குமார், விழுப்புரம் எஸ்.ஜவஹர் ஆகியோர் உடனிருந்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN