Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மார்ச் (ஹி.ச.)
சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வான மயிலை த. வேலுவின் இல்லத் திருமண விழா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி (30.04.2025) நடைபெற்றது.
அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேகையில், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் எனது வேண்டுகோள் எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து நேதன் சிற்றரசு என்பவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில்,
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைதளங்கள் தமிழ் நாட்டில் இல்லை.
எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் குழந்தைகளுக்கு பெண், ஆண், அகர வரிசை வாரியாக தமிழ் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் அதில், குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள் பல்வேறு தளங்களில் காணப்பட்டாலும், அதற்கான விளக்கங்கள் அரிதாகவே கொடுக்கப்பட்டுள்ளன. இதனைக் களையும் நோக்கில் தமிழ் இணையக் கல்விக்கழகம் அழகிய தமிழ்ப் பெயர்களை அவற்றுக்குரிய விளக்கங்களுடன் அனைவரும் எளிதில் அணுகும் வகையில் வெளியிடுகிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பெயர்கள் மட்டுமல்லாது, கூடுதல் பெயர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் அவ்வப்போது தொடர்ந்து வெளியிடப்படும்.
மேலும், பயனர்களும் தங்கள் பங்களிப்பினை வழங்கும் வசதி இத்தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு தமிழ்ப் பெயர்களால் நிறையட்டும். நான் நடத்தி வைக்கும் ஒவ்வொரு திருமணத்திலும், 'பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள்' என மணமக்களிடம் கோரிக்கை வைப்பேன்.
அதற்கான பெயர்களையும் அவற்றின் பொருளோடு சேர்த்து உங்களுக்கு இப்போது வழங்கியிருக்கிறோம். தொடர்ந்து புதிய பெயர்களைப் பதிவேற்றுவோம். நீங்களும் பரிந்துரைத்துப் பங்களிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b