Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மார்ச் (ஹி.ச)
கோவையில் பெண் காவலர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் காவல் உயர் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகப் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
கோவை புதூர் பகுதியில் பெண் காவலர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் காவல் உயர் அதிகாரி கைது – காப்பாற்ற வேண்டிய காவலர்களே காயப்படுத்தினால் பெண்கள் பாதுகாப்பு எப்படிச் சாத்தியமாகும் ?
கோவை புதூர் பகுதியில் இயங்கிவரும் பட்டாலியன் படைப்பிரிவில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் ஊழியர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரே சக பெண் காவலர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
போதைப் பொருள் விற்பனையில் தொடங்கி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வரை தொடர்பில் இருக்கும் காவல்துறையினரை வைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, கடந்த காலங்களை ஒப்பிடும் போது குற்றங்களைக் குறைந்துவிட்டதாக அரசு உயர் அதிகாரிகளை வைத்து செய்தியாளர் சந்திப்பை நடத்துவதும், பெண் சுதந்திரம் பற்றிப் பேசுவதும் வெட்கக்கேடானது.
எனவே, தமிழகப் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி, அவர்களை சுதந்திரமாக நடமாடவே முடியாத அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கிய திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பப் போகின்ற நாள், இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், அன்று அமையப்போகும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி பெண்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b