Enter your Email Address to subscribe to our newsletters

அங்காரா, 15 மார்ச் (ஹி.ச.)
கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தின் கூட்டுப் படைகள் ஈரான் மீது ஆகாய மார்க்கமாகத் தாக்குதல் நடத்தின. தொடர்ச்சியாக நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
மேலும், ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதோடு, ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவரது மனைவி, புதல்வி, மருமகன் உள்ளிட்ட உறவினர்களும் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி தந்து வருகிறது. இதன் காரணமாக மோதல் போக்கு தொடர்ந்து நீடிப்பதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
கத்தார், ஈராக்கின் குர்திஸ்தான், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, துருக்கி மீது செலுத்தப்பட்ட ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை துருக்கியின் ஆகாயப் பாதுகாப்பு கட்டமைப்பு தடுத்து அழித்தது.
இந்தச் சூழ்நிலையில், ஈரான்-இஸ்ரேல் யுத்தத்தில் துருக்கி பங்கு பெறாது என்று அந்நாட்டின் அதிபர் எர்டோகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்,
எங்கள் வான் பாதுகாப்பிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈரான்-இஸ்ரேல் இடையேயான யுத்தத்தில் துருக்கி நேரடியாக ஈடுபடாது. எங்கள் தேசத்தின் பாதுகாப்பே எங்களுக்கு அதிமுக்கியமானது.
என்று குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM