விடுமுறை தினமான இன்று கன்னியாகுமரியில் திரண்ட பொதுமக்கள்
கன்னியாகுமரி, 15 மார்ச் (ஹி.ச) உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழும் கன்னியாகுமரிக்கு விடுமுறை நாட்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. குறிப்பாக விவேகானந்தர் பாறை நினைவிடத்தையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் கண்ணா
public gathered in Kanyakumari


கன்னியாகுமரி, 15 மார்ச் (ஹி.ச)

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழும் கன்னியாகுமரிக்கு விடுமுறை நாட்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.

குறிப்பாக விவேகானந்தர் பாறை நினைவிடத்தையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் கண்ணாடி பாலத்தை பார்க்க தற்போது நிறைய பேர் வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.

காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததால், படகிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

தற்போது குறைவான படகுகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இன்னும் சில படகுகளை இயக்கினால் காத்திருக்கும் நேரம் குறையும் என்று பயணிகள் கருத்து தெரிவித்தனர்.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b