Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 16 மார்ச் (ஹி.ச.)
3,000 டன் ஈரமான கழிவுகளைக் கொண்டு தினமும் இயற்கை எரிவாயு தயாரிக்க பெருநகர பெங்களூரு ஆணையம் திட்டம் தீட்டியுள்ளது.
குப்பை கழிவுகள் மேலாண்மை என்பது உலகளவில் பெரு நகரங்களுக்கு சவால் தரும் விஷயமாகவே மாறிவிட்டது. தென்னிந்தியாவின் முன்னணி நகரங்களாக திகழும் சென்னை மற்றும் பெங்களூருவும் இதற்கு விதிவிலக்கு கிடையாது.
இந்த 2 நகரங்களிலுமே குப்பை கழிவுகள் தனியார் நிறுவனங்களால் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்குகளுக்கும், இயற்கை எரிவாயு உற்பத்தி மையங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
மக்கள் தொகை அடிப்படையில் சென்னையைக் காட்டிலும் பெங்களூரு பெரிய நகரமாக திகழ்கிறது. அங்குள்ள கால சீதோஷ்ண நிலையும், கல்வி - வேலை வாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களும் பலராலும் விரும்பப்படும் நகரமாக பெங்களூருவை மாற்றி இருக்கிறது.
எனினும், மக்கள் தொகை பெருக்கம் காரணமாக போக்குவரத்து, வீட்டு வாடகை, மின்சாரம், பேருந்து வசதி, குப்பை மேலாண்மை என பல்வேறு சிக்கல்களும் நிலவி வருகின்றன.
இதில் கவலையளிக்கும் விஷயமாக கருதப்படுவது குப்பை மேலாண்மையே. பெங்களூருவை பொருத்தவரையில் ஒரு நாளைக்கு 5,000 முதல் 6,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சென்னையில் ஒரு நாளைக்கு சுமார் 6,300 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
சென்னையயை பொறுத்தவரை ஒரு நபருக்கு 0.71 கிலோ என்ற அடிப்படையிலும், பெங்களூருவை பொருத்தவரையில் ஒரு நபருக்கு 0.5 கிலோ என்ற அடிப்படையில் குப்பைகள் சேகரிப்பு வீதம் உள்ளது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு 10 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை 3வது அழுக்கான நகரமாகவும், பெங்களூரு 5வது அழுக்கான நகரமாகவும் உள்ளன.
பெங்களூருவின் மொத்த குப்பைகளில் சுமார் 60% ஈரமான கழிவுகள் ஆகவும், 25 முதல் 30 சதவீதம் வரை உலர் கழிவுகளாகவும், 10 முதல் 15 சதவீதம் சானிடரி மற்றும் பிற கழிவுகள் ஆகவும் உள்ளன.
இதில் அதிகளவாக உள்ள ஈரமான கழிவுகள் மட்டும் ஒரு நாளைக்கு 3,000 முதல் 3,500 டன்கள் என்ற அளவில் ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் சேகரிக்கப்படுகின்றன.
இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகளில் 2,000 டன் என்ற அளவிற்கு மட்டுமே மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. 3,000 முதல் 3,200 டன் குப்பைகள் வரை குப்பை சேகரிப்பு மையங்களில் அப்படியே கொட்டப்படுகின்றன.
இவ்வாறான குப்பைகளை சென்னையில் பயோ மைனிங் முறையில் மக்கச் செய்யப்படுகின்றன.
பெங்களூருவில் சேகரிக்கப்படும் மொத்த கழிவுகளில் சுமார் 3,000 டன் ஈரமான கழிவுகளைக் கொண்டு தினமும் இயற்கை எரிவாயு தயாரிக்க பெருநகர பெங்களூரு ஆணையம் திட்டம் தீட்டியுள்ளது. ஒரு டன் குப்பையில் இருந்து 30-50 கிலோ பயோ கேஸ் தயாரிக்கலாம்.
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் காரணமாக எல்.பி.ஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு பரவலாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் உணவகங்கள், டீக்கடைகள் போன்றவை இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது போன்ற ஒரு சூழலில் குப்பைகளில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் பெருநகர பெங்களூரு ஆணையத்தின் முடிவுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
குப்பைகளின் மூலம் சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் போன்றவை தயாரிக்கப்படுகிறது, இதனால் சுற்றுச்சூழல் மாசடைவதும் தடுக்கப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN