Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மார்ச் (ஹி.ச.)
கடந்த பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் இந்திய அணியில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதுதொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த நம்முடைய ஸ்பின் ட்வின்ஸ் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தியுடனான மறக்க முடியாத தருணங்கள். இந்த சந்திப்பின்போது உறுதி, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட அவர்களின் பயணம் குறித்த அருமையான உரையாடல் நடந்தது.
வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி இருவரும் இன்னும் பல போட்டிகளில் வெற்றி பெறும் தருணங்களையும், பெருமைமிக்க தருணங்களையும் பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b