Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மார்ச் (ஹி ச.)
சென்னை புளியந்தோப்பு திருவேங்கடசாமி தெருவில் சென்னை நகர்புற பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது.
நேற்று இரவு இந்த மருத்துவ மையம் பின்புறம் இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை பெண் செவிலியர்கள் மற்றும் காவலாளி உடனே இது குறித்து 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மயங்கி கிடந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த புளியந்தோப்பு போலீஸார் உயிரிழந்த இளைஞர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது இளைஞர் மயங்கி கிடந்த இடத்தில் இரண்டு போதை ஊசி, செருப்பு இருந்ததை கண்டு பிடித்து அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் உயிரிழந்த நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் புளியந்தோப்பு டிக்காஸ்டர் சாலை பாடிசன் புரம், பகுதியை சேர்ந்த ரிஸ்வான் (19) என்பதும் இவர் ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில் நேற்று இரவு மாணவர் ரிஸ்வான் சுகாதார மருத்துவ மையத்தில் பின்புறம் சென்று போதை மாத்திரையை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலம் செலுத்தி கொண்டதால் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே ரிஸ்வான் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ