Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மார்ச் ( ஹி.ச)
தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
பொதுத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5.69 கோடி வாக்காளர்கள் உள்ளனர். எந்த வாக்குச்சாவடியில் தங்கள் வாக்கு இருக்கிறது என்பதை மக்கள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி விவரங்கள் தொடர்பாக ஏற்கெனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
வாக்களிக்கும் இடத்தில் செல்போன்களுக்கு அனுமதி இல்லை. செல்போன்களை வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பாக வைக்க பெட்டக வசதி செய்து தரப்படும். மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை பொது விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
தேர்தலை முன்னிட்டு 2,106 பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சோதனைகளின்போது பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தகுந்த ஆவணங்களை வைத்திருந்தால் பணத்தை உடனே திருப்பித்தர உத்தரவிட்டுள்ளோம்.
ஒரே நாளில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.26 கோடி மதிப்புள்ள ரொக்கம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெரிய அளவிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்.
அரசியல் கட்சியினர் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம். தேர்தல் பிரசார அனுமதியை தேர்தல் ஆணைய இணையதளம் மூலமே பெற வேண்டும்.
5 ஆயிரம் பேருக்கு மேல் கூடும் கூட்டம் என்றால் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b