Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மார்ச் (ஹி.ச)
கோவையில் பெண் காவலரை பாலியல் துன்புறுத்தல் செய்த சிறப்பு காவல் படை எஸ்.பி. செந்தில்குமாரை மீது கடுமையான நடவடிக்கை எடுத்திடுக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவை மாவட்ட சிறப்பு காவல் படை அதிகாரியாக பணியாற்றி வரும் எஸ்.பி. செந்தில்குமார் மீது, பெண் காவலர் ஒருவர் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அளித்துள்ள புகார் காவல்துறையில் தொடரும் பெண்கள் மீதான வன்முறைகளை வெளிபடுத்துகிறது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறை அமைப்பின் உள்ளேயே பெண்கள் இத்தகைய பாலியல் தொல்லைகளுக்கும் அதிகார அத்துமீறல்களுக்கும் ஆளாக வேண்டிய நிலை உருவாகியுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
காவல்துறை போன்ற முக்கியமான துறைகளில் பணியாற்றும் பெண்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஆணாதிக்க மனப்பான்மை, பதவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற அணுகுமுறை பல இடங்களில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாக வெளிப்படுகின்றன.
அதிகாரத்தை பயன்படுத்தி பெண்களை மனரீதியாகவும் பணிச்சூழல் ரீதியாகவும் கட்டுப்படுத்த முயல்வது பெண்களின் கண்ணியத்தையும் மனித உரிமையையும் நேரடியாக மீறுவதாகும் .இச் சூழலை மாற்றி அமைக்க வேண்டிய அடிப்படை பொறுப்பு அரசு மற்றும் நிர்வாகத்திற்கு உள்ளது.
இந்த வழக்கில் செந்தில்குமாருக்கு உதவியதாக
துணை காவல் ஆய்வாளர் புஷ்பாகுமாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, இதன் பின்னணியில் இன்னும் சிலர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. எனவே உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில் எந்தவித பாரபட்சமும் இன்றி விரைந்து மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
புகார் அளித்த பெண் காவலருக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
விசாரணை நடைபெறும் காலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொறுப்புப் பதவிகள் எதுவும் வழங்கக்கூடாது.
காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாலின சமத்துவம் நிலவும் பணிச்சூழலை உறுதி செய்ய கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களைப் விசாரிக்க உள்புகார் குழு செயல்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
பெண்கள் அச்சமின்றி, கண்ணியத்துடன், சம உரிமையுடன் பணியாற்றும் சூழலை காவல்துறை அமைப்புகளில் உருவாக்கிட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ