Vigil மொபைல் அப்ளிகேஷன் மூலம் வரும் புகார்கள் குறித்து 100 நிமிடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் - திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன்
திண்டுக்கல், 16 மார்ச் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: த
D


திண்டுக்கல், 16 மார்ச் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி முதல் 24 மணி நேரத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள புகைப்படங்கள் மற்றும் போஸ்டர் போன்றவை அகற்றப்படும்.

48 மணி நேரத்தில் பொது இடத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றப்படும் மற்றும் 72 மணி நேரத்தில் தனியார் பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றப்படும்.

குறிப்பாக ஊரக பகுதிகளில் அனுமதியோடு வைக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் குறிப்பிட்ட கட்சிகளின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தலுக்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரம் செயல்படும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

Vigil மொபைல் அப்ளிகேஷன் மூலம் வரும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

திருமண மண்டபங்கள், பிரின்டிங் பிரஸ், நோட்டீஸ் மற்றும் ஃபிளக்ஸ் ஆகியவை அனுமதி பெற்று அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.

சமூக வலைதளங்களில் இரு கட்சிகளுக்கிடையே பிரச்சனை ஏற்படும் விதமாகவோ, சாதி மத பிரச்சினையை தூண்டும் விதமாகவோ, சட்டத்திற்கு புறம்பாக பதிவிடப்படும் பதிவுகள் அனைத்தும் கண்காணித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் எல்லைகளில் 11 இடங்களில் ஏற்கனவே சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது தற்போது அங்கு மேலும் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பறிமுதல் செய்யப்படும் அனைத்து பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து உடனடியாக விவரங்கள் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படை தொகுதிக்கு 3 குழுக்கள் என 21 மற்றும் கொடைக்கானலுக்கு 3 குழுக்கள் என் மொத்தம் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பறக்கும் படை குழுவிலும் 3 நபர்கள் வீதம் 24 மணி நேரம் செயல்படும் விதத்தில் ஒரு குழுக்களிலும் 9 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / Durai.J