Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மார்ச் (ஹி.ச.)
ஈரான் நடத்தும் வான்வெளி தாக்குதல் காரணமாக, சென்னையிலிருந்து இன்று அதிகாலை துபாய் புறப்பட்டுச் சென்ற 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' பயணிகள் விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 2.15 மணிக்கு துபாயிலிருந்து 242 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. பின்னர், மீண்டும் சுமார் 200 பயணிகளை ஏற்றிக்கொண்டு, அதிகாலை 4 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றது.
குஜராத் கடல் எல்லைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்த போது, துபாயில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடப்பதாகவும், இதனால் வான்வெளி தற்காலிகமாக மூடப்படுவதாகவும் விமானிக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, துபாய் மற்றும் சென்னை விமான நிலையகளின் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விமானி பேசினார்.
தொடர்ந்து, மீண்டும் சென்னைக்கே திரும்புமாறு விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை 8.20 மணியளவில் மீண்டும் சென்னைக்கே திருப்பி கொண்டு வரப்பட்டு தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் தற்போது விமானத்திற்குள்ளேயே அமர வைக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் விமானம் புறப்படுவதற்கு கால தாமதமானால்,சென்னையில் உள்ள ஹோட்டல்களில் பயணிகள் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், நிலைமை சீரானதும் மீண்டும் துபாய்க்கு அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளிடையே கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மோதல் தொடங்கிய நிலையில், நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் ராணுவ தளங்கள் மீது ஈரான் வான்வெளி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி அந்த பகுதிகளில் அவ்வப்போது வான்வெளிகள் மூடப்படுகின்றன.
இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து துபாய், கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
போர் தொடங்கிய முதல் 4 நாட்களில் சென்னையிலிருந்து துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் கணிசமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN