Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மார்ச் (ஹி.ச)
கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ‘தொப்பை’ கணேசன், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,புழல் காவாங்கரை மகாவீர் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜவுளி வர்த்தகர் விஜயகுமார் வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மங்கி குல்லா அணிந்த கும்பல் வீட்டுக்குள் புகுந்து, விஜயகுமார், அவரது மனைவி மற்றும் மகள்களை கட்டிப் போட்டு மிரட்டி, ரூ.25 லட்சம் பணமும் 15 சவரன் நகைகளையும் கொள்ளையடித்து தப்பிச்சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இரண்டு வழக்கறிஞர்கள் உட்பட 6 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக ‘தொப்பை’ கணேசன் இருப்பது தெரியவந்தது.
பல கொள்ளை மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் தொப்பை கணேசன் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.
25 லட்சம் பணம் மற்றும் 15 சவரன் நகைகள் கொள்ளையடித்த வழக்கு, கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் இவர்மீது நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு போலீசார் இவரை துப்பாக்கி முனையில் கைது செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான தொப்பை கணேசனை தேடி வந்த போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை கைது செய்ய முயன்றபோது, கணேசன் தப்பிக்க முயன்றதுடன் போலீசாரை தாக்க முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தொப்பை கணேசனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த என்கவுண்டர் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ