Enter your Email Address to subscribe to our newsletters

கட்டாக், 16 மார்ச் (ஹி.ச.)
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் செயல்பட்டு வரும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று அதிகாலை முதல் தளத்தில் திடீரென தீப்பற்றியது.
உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்த மருத்துவனை ஊழியர்கள் நோயாளிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு முயற்சி செய்து இருக்கின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் நோயாளிகள் 10 பேர் உயிரிழந்தனர்.
நோயாளிகளை பாதுகாப்பாக மீட்டுச் சென்றபோது மருத்துவமனை ஊழியர்கள் 11 பேர் தீக்காயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், ஒடிசாவில் உள்ள வேறு ஒரு அரசு மருத்துவனைக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த செய்தி கிடைத்ததும், முதல்வர் மோகன் மஜி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களைச் சந்தித்து பேசினார்.
செய்தியாளர்களிடம் முதல்வர் மோகன் மஜி கூறியதாவது:
23 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
காயமடைந்த நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். தீ விபத்துக்கான சரியான காரணம் தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
விரிவான விசாரணை நடத்தி காரணத்தை கண்டறிய அதிகாரிகள், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு மோகன் மஜி கூறினார்.
Hindusthan Samachar / vidya.b