சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு- பெங்களூருவில் 25 ஆயிரம் ஓட்டல்கள் மூடல்
பெங்களூர், 16 மார்ச் (ஹி.ச.) ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலு
சிலிண்டர்


பெங்களூர், 16 மார்ச் (ஹி.ச.)

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஈரான், ஹார்மூஸ் ஜலசந்தியை மூடிவிட்டது.

இதனால் அந்த வழியாக எண்ணெய் சரக்கு கப்பல்கள் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இதன் காரணமாக இந்திய எண்ணெய் கப்பல்களும் அங்கு சிக்கிக் கொண்டுள்ளன. இதனால் நாட்டில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்கள், ஓட்டல்கள், உணவகங்கள். தங்கும் விடுதிகள் என வணிக நிறுவனங்களுக்கு வினியோகம் செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஓட்டல்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பெங்களூருவில் மட்டும் சுமார் 50 ஆயிரம் ஓட்டல்கள், உணவகங்கள் இயங்குகின்றன. இவற்றில் இதுவரை சுமார் 25 ஆயிரம் ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் தினசரி உணவு தேவைக்காக ஓட்டல்களை நம்பியுள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில ஓட்டல்கள் விறகு அடுப்பு, மின்சார அடுப்புகள் மூலம் இயங்குகின்றன.

அங்கு உணவு வகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அரிசி சாதம், சாம்பார், பொரியல் போன்ற சில வகையான உணவுகள் மட்டுமே தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.

இதுகுறித்து பெங்களூரு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க கவுரவ தலைவர் பி.சி.ராவ் கூறுகையில்,

பெங்களூருவில் சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 25 ஆயிரம் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதில் பணியாற்றி வரும் ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களாக ஓட்டல்கள் மூடப்பட்டதால் ரூ.100 கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு எங்களுக்கு சிலிண்டர்களை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தால் நாங்கள் உடனடியாக ஓட்டல்களை திறப்போம் என்றார்.

Hindusthan Samachar / GOKILA arumugam