Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 16 மார்ச் (ஹி.ச.)
கரூர் மாவட்டம் மருதூர் சோதனைச் சாவடியில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் ஒரு லட்சம் பணத்தினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனை பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வாறு கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திருச்சி கரூர் மாவட்ட எல்லையான மருதூர் சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக முசிறியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சாரதா (வயது 55) என்பவர் வந்த காரினை சோதனையிட்ட போது அவரது கை பையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் ஒரு லட்சம் கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டது.
டெல்லியில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு தன் குடும்பத்தினருடன் வந்தவர், விமான நிலையத்திலிருந்து முசிறி நோக்கி காரில் வந்த போது வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வரப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து பணத்தினை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்,தேர்தல் நடத்தும் அலுவலரும் சார் ஆட்சியருமான சுவாதி ஸ்ரீ இடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் சார்நிலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN