Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 16 மார்ச் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில் நிலையப் பெயர்ப் பலகைகளில் இருந்த ஹிந்தி எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் ரயில்வே நிலையத்திற்கு வந்த 'மே 17' இயக்கத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர், அங்கு வைக்கப்பட்டிருந்த அணைத்து பெயர்ப் பலகைகளில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை மட்டும் குறிவைத்து கருப்பு தார் பூசி அழித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில் நிலைய மேலாளர் உடனடியாக ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF), தார் பூசப்பட்ட பெயர்ப் பலகைகளைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்
இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக 'மே 17' அமைப்பைச் சேர்ந்த மூன்று நபர்கள் மீது ரயில்வே சட்டப் பிரிவுகள் 147 (அத்துமீறி நுழைதல்), 145பி (பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல்), மற்றும் 166 (ரயில்வே சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தப்பியோடிய நபர்களைப் பிடிக்க ரயில்வே போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ரயில் நிலைய வளாகத்தில் மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN