திமுக அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வரும் 17-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!
சென்னை, 16 மார்ச் (ஹி.ச.) தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்,போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அர
Eps vs mks


சென்னை, 16 மார்ச் (ஹி.ச.)

தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்,போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசைக் கண்டித்து, கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து, 17.3.2026 அன்று வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில்,

2021-ஆம் ஆண்டு, ஸ்டாலின் தமிழ் நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திமுக-வினுடைய விடியா ஆட்சியில் தமிழ் நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது.

தமிழ் நாட்டின் தெருக்களில் கஞ்சா புழக்கம் இல்லாத இடமே இல்லை என்கிற நிலையை இந்த விடியா அரசு உருவாக்கி இருக்கிறது.

வேதனையோடு சொல்வதென்றால், கல்லூரி மாணவர்களும், மாணவிகளும், பள்ளிக்கூட மாணவ மாணவிகள்கூட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை மிகச் சாதாரணமாக பயன்படுத்துகிற செய்திகளும், காட்சிகளும் நாட்டின் முக்கிய ஊடகங்களிலேயே வெளியிடப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டு காலத்திற்குள்ளாகவே சென்னையில் மக்கள் அதிகம் கூடுகிற மால் ஒன்றில் போதைப் பொருள் பார்ட்டி நடத்தப்பட்டு அதில் ஒரு இளைஞர் உயிரிழந்தார் என்கிற செய்தி நாட்டையே உலுக்கியது.

தமிழ் நாட்டின் தலைநகரில் போதைப் பொருள் பார்ட்டி நடக்கிறது என்பதைக்கூட கவனிக்க தவறி இருக்கிறது உளவுத் துறை. போதைப் பொருள் விற்பனையாளர்களை தடுக்கத் தவறி இருக்கிறது காவல்துறை.

காவல் துறையை கையிலே வைத்திருக்கின்ற முதலமைச்சர் இதுசம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கள்ள மவுனம் சாதித்தார்.

ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்தோடு, இந்த போதைப் பொருள் மாஃபியாக்கள் தமிழ் நாட்டில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

கஞ்சா வழக்குகளில் திமுக கட்சிக்காரர்களே கைதாகிறார்கள். கள்ளச் சாராயம் காய்ச்சி நூற்றுக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த கள்ளச் சாராய மாஃபியா, திமுக-வின் அங்கத்தினராகவும், ஆதரவுடனும் இருந்தது நாடறிந்த உண்மை.

சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் திமுக-வினுடைய முக்கிய நிர்வாகிக்கு, அதிலும் குறிப்பாக முதலமைச்சர் குடும்பத்துடன் நெருங்கிப் பழகுகிற அளவுக்கு வாய்ப்பைப் பெற்றிருந்த ஜாபர் சாதிக் என்கிற நபருக்கு பெரிய தொடர்பு இருக்கிறது என்று சொல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரைக் கைது செய்தபோது இந்த நாடே போதைப் பொருள் மாஃபியாக்களால் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிற உண்மை மக்களுக்குப் புரிந்தது.

இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நடந்தும் ஸ்டாலின் அரசாங்கம் எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனுடைய விளைவு, இந்த போதைப் பொருள் ஆசாமிகள் நாட்டினுடைய சட்டம்-ஒழுங்கையே கேள்விக்கு உள்ளாக்கினார்கள்.

காவல்துறை அதிகாரிகள் போதைப் பொருள் ஆசாமிகளிடம் அடி வாங்கிக்கொண்டு ஓடி வருகின்ற காட்சிகளை தமிழ் நாடு பார்த்தது.

காக்கிச் சட்டையோடு நிற்கின்ற அதிகாரிகளையே, கத்தியைக் காட்டி போதைப் பொருள் ஆசாமிகள் மிரட்டுகின்ற காட்சிகள் எல்லாம் அரங்கேறியது. சட்டம்-ஒழுங்கு சவக்குழிக்கே போய்விட்டது.

மதுரையில் காவல் நிலையத்திற்குள்ளாகவே புகுந்து காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி காவலர்களை தாக்கிய சம்பவமும் அரங்கேறியது.

கோவையில், திருச்சியில், திருநெல்வேலியில் என்று தமிழ் நாட்டினுடைய அனைத்து மாவட்டங்களிலும் கூலிப் படைகள் களத்தில் இறங்கி கொலை செய்கின்ற காட்சிகள் தொடர்கதை ஆகிப்போயின.

காவல்துறை பெண் அதிகாரிகள் போதைப் பொருள் ஆசாமிகளால், குண்டர்களால் தாக்கப்படுகின்ற காட்சிகளை தமிழ் நாடு பார்த்தது.

சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்த நேரத்திலும் காவல் துறையை கையில் வைத்திருக்கின்ற தமிழ் நாட்டின் முதலமைச்சர் கள்ள மவுனம் சாதித்ததோடு இல்லாமல் விளம்பர ஆட்சிக்கான போட்டோ ஷூட்களை நடத்திக்கொண்டிருந்தார்.

இந்த போதை கும்பல், கூலிப் படைகள் ஏற்படுத்திய சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளில் உச்சமாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான, வரலாற்றில் முன் எப்போதும் பார்த்திடாத அளவிற்கு மிகக் கொடூரமான பாலியல் கொடுமைகளும், கொலைகளும் அரங்கேற்றப்படுகின்றன.

உலகப் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து அங்கே படிக்கின்ற மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டது.

அந்தக் குற்றவாளியோடு தொடர்பில் இருந்த ஆளுங்கட்சி பிரமுகர்களும், அமைச்சர்களும் எந்தவிதமான விளக்கத்தையும் கொடுக்காமல் ஒதுங்கிக்கொண்டார்கள்.

சென்னை, அண்ணாநகர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டபோது காவல் துறை பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரைத் தாக்கி, குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்துகொண்டது என்று உயர்நீதிமன்றமே சுட்டிக் காட்டிய பிறகும் ஸ்டாலின் அரசாங்கம் கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல் உச்சநீதிமன்றத்தை நாடி CBI விசாரணை வேண்டாம் என்று கெஞ்சியது.

திமுக கொடி கட்டிய காரில் ECR சாலையில் பெண்களை துரத்திக்கொண்டு ஓடியதும், தெய்வச் செயல் என்கிற நபர் பெண்களை ஏமாற்றி திமுக-வின் முக்கிய புள்ளிகளிடம் அவர்களை பலியாக்குகிறான் என்கிற செய்தியை ஒரு பெண், ஆளுநர் மாளிகை முன்னாள் நின்று கண்ணீர் மல்க கதறிக்கொண்டே சொன்னபோது கல்நெஞ்சம்கூட கரைந்து போயிருக்கும். ஆனால், ஸ்டாலின் கும்பல் மனமிறங்கவில்லை.

இப்படியாக ஆயிரக்கணக்கான கொடுங்குற்றங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, இந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஏராளமான வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது குழந்தையை திமுக பிரமுகர் ஒருவரே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிற செய்தி நம் ரத்தத்தை உறைய வைக்கிறது.

மேலும், இந்த விவகாரத்தில் காவல் துறை மெத்தனப் போக்குடன் ஆளும் கட்சிப் பிரமுகர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதும்; கொலை செய்யப்பட்ட இரண்டரை வயது குழந்தையினுடைய உடற்கூறாய்வில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மறைக்கப்பட்டிருக்கிறது என்கிற செய்தியும், இந்த அரசு நிர்வாகத்தின் முழுமையான தோல்விக்கு எடுத்துக்காட்டு.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவி காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு அவருடைய உடல் வெட்டி வீசப்பட்டிருக்கிறது என்கிற செய்தி வரை, தமிழ் நாட்டின் மனசாட்சியையே உலுக்கி இருக்கிறது. தமிழ் நாட்டில் பெண்களும், குழந்தைகளும் பேரச்சத்தோடு வாழ்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 30 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4 பட்டியலின இளைஞர்கள் லாக்கப்பில் மரணமடைந்துள்ளனர்.

இதிலிருந்து, விடியா தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எதைநோக்கிச் செல்கிறது என்பதையும்; வேலியே பயிரை மேய்கிறது என்பதையும் மக்கள் தெளிவாக உணர்ந்து மிகுந்த வேதனைப்படுகின்றனர்.

தமிழ் நாட்டு மக்கள் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள். தமிழ் நாடு ரவுடிகளினுடைய புகலிடமாக, கூலிப் படைகளின் ராஜ்ஜியம் நடக்கின்ற இடமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தக் கொடூரமான சட்டம்-ஒழுங்கு மீறல்கள் குறித்து சட்டமன்றத்திற்குள்ளும், வெளியிலும், தொடர்ந்து எடுத்துச் சொல்லி போராடி வந்திருக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

ஆனால், எந்தப் போராட்டத்திற்கும் செவி சாய்க்காத ஸ்டாலின் அரசாங்கம், இன்னும் இந்த மக்கள் வதைக்கப்பட்டிருக்கின்ற செய்திகளைக்கூட வெளியிடாமல் கள்ள மவுனம் காத்துக்கொண்டே இருக்கிறது. துளிகூட நிர்வாகத் திறமை இல்லாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கை காப்பதில் முழுமையாக தோல்வி அடைந்திருக்கிறார்!

திமுக அரசு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஏன் ? என்கிற கேள்வியை மக்கள் கேட்கிறார்கள்.

எனது தலைமையிலான அம்மா அரசு வழங்கிக் கொண்டிருந்த மக்கள் நலத் திட்டங்கள் அனைத்திற்கும் ஸ்டாலின் தலைமையிலான விடியா அரசு மூடு விழா நடத்தியது.

தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டது.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது.

மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குகிற திட்டம் கைவிடப்பட்டது.

வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டது.

இப்படி எல்லா நலத் திட்டங்களையும் நிறுத்திய இந்த விடிய திமுக அரசு, அனைத்துப் பொருட்களின் விலைகளையும் ஏற்றி, வரிச் சுமையை மக்கள் தலையில் சுமத்தி சொல்லொண்ணா கொடுமைகளை நிகழ்த்தி இருக்கிறது.

சாதாரணமாக, குடும்பங்களின் அடிப்படைத் தேவையாக இருக்கின்ற அரிசி, பருப்பு எண்ணெய் போன்ற பொருட்களின் விலைகள்கூட மிகப் பெரிய அளவில் பலமடங்கு அதிகரித்திருக்கின்றன. உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத ஸ்டாலின் அரசாங்கம், வரிச் சுமையை மக்கள் மீது திணித்திருக்கிறது.

ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்சாரக் கணக்கீடு செய்து, மின் கட்டணத்தை பாதியாகக் குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்த ஸ்டாலின், அவர் ஆட்சியில் மின் கட்டணத்தை மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறார்.

500 ரூபாய் மின் கட்டணம் கட்டிக்கொண்டிருந்த ஒரு குடும்பம், இப்பொழுது குறைந்தபட்சம் 1,800 ரூபாய் கட்ட வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

தண்ணீர் வரி பல மடங்கு உயர்ந்திருக்கிறது. 250 ரூபாய் குடிநீருக்கு வரி கட்டிக் கொண்டிருந்த குடும்பம், இப்பொழுது ஸ்டாலின் ஆட்சியில் 1,250 ரூபாய் கட்டியே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது.

வீட்டு வரி மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. 15 ஆயிரம் ரூபாய் வரி கட்டிக் கொண்டிருந்தவர்கள், தற்போது 60 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

பால் விலை உயர்ந்திருக்கிறது; குப்பைக்கு வரி போடப்பட்டிருக்கிறது; இந்தியாவில் எங்குமே இல்லாத வகையில் குடிசைக்கு கூட வரி போட்டிருக்கிறது ஸ்டாலின் அரசாங்கம்.

மாநகராட்சிகளில் காலி இட வரி (VLT) 2021-ல் சதுர அடிக்கு 40 பைசாவாக இருந்ததை, இப்போது 1.20 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

கட்டிட அனுமதிக்கான கட்டணம் சதுர அடிக்கு 40 ரூபாயாக இருந்தது.

இப்போது 100 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. குடியிருப்புக்கான புதிய வரி விதிப்பு கட்டணம் சதுர அடிக்கு ரூ. 1.10-ஆக இருந்தது, இப்போது ரூ. 4.10-ஆக உயர்ந்திருக்கிறது. பத்திரப் பதிவு துறையிலும் வரி கொள்ளையை ஸ்டாலின் அரசாங்கம் அரங்கேற்றி இருக்கிறது.

ஆயிரம் சதுர அடிக்குள்ளாக வீடு கட்ட விரும்புகின்ற நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, இனி சொந்த வீடு கட்டுவது என்பதே கனவு என்கிற நிலையை இந்த விடியா அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காட்டாட்சி தர்பாரில் மக்கள் வாழ வழியற்று விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, போதைப் பொருள் விற்பனையில் திமுக பிரமுகரே கைதாவதும்; கள்ளச் சாராய விற்பனையில் திமுக பிரமுகரே ஈடுபட்டிருப்பதும்; மணல் கொள்ளை, இயற்கைவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் திமுக-வின் சட்டமன்ற உறுப்பினரே ஈடுபட்டிருப்பதும்; ஏழை, எளிய மக்களை ஏமாற்றி கிட்னி திருடிய வழக்கில் திமுக-வின் சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனையையே குற்றம் சாட்டப்பட்டிருப்பதும்; பல்வேறு பாலியல் வன்கொடுமைகளில் ஆளுங்கட்சி பிரமுகர்களே முதன்மைக் குற்றவாளிகளாக ஈடுபட்டிருப்பதும்; இந்த குற்றங்களுக்கெல்லாம் ஆளுங்கட்சியும், முதலமைச்சரும் அரணாக நின்று பாதுகாப்பு கொடுக்கிறார்களோ என்கிற பெரும் சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த பொம்மை முதலமைச்சரின் நிர்வாகத் திறமையற்ற, மக்கள் விரோத ஆட்சியைக் கண்டித்து, தமிழ் நாடு முழுவதும் இன்றைக்கு மக்கள் பெரும் கோபம் கொண்டிருக்கிறார்கள்.

விடியா திமுக ஆட்சியின் மேற்கண்ட மக்கள் விரோதச் செயல்களின் வெளிப்பாடுதான், ஆளும் கட்சிக்காரர்களை மக்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தியும், வெளியேறச் சொல்லி முழக்கமிட்டும் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.

எனவே, இந்த கொடூர ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களுடைய முகத்திரைகளை கிழிக்கும் வண்ணமும், தமிழ் நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெருந்திரளாக மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் அனைத்து மக்களும் அலை அலையாகத் திரண்டு வந்து பேராதரவினைத் தர வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN