துபாயில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு - விமான சேவை தற்காலிக நிறுத்தம்
துபாய், 16 மார்ச் (ஹி.ச) அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் இஸ்
Oil Depot Ablaze in Dubai


துபாய், 16 மார்ச் (ஹி.ச)

அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.

அந்த வகையில் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இன்று (மார்ச் 16) அதிகாலை நடந்த ட்ரோன் தாக்குதலில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

துபாயில் அமைந்துள்ள உலகின் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையத்தின் அருகே நடந்த இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் துபாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயை அணைக்க துபாய் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) அருகே நடந்த ட்ரோன் தாக்குதலில் எரிபொருள் தொட்டிகளில் ஒன்று பாதிக்கப்பட்டது.

தீயை கட்டுக்குள் கொண்டுவர துபாய் பாதுகாப்பு படைகள் தற்போது தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இச்சம்பவத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் கிடங்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

துபாய் விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் துபாய்க்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் விமான நிறுவனம் துபாய்க்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b