திருவிதாங்கூர் அரண்மனையில் ரூ.2 கோடி நகைகள் அபேஸ்,ஊழியர்கள் கைவரிசையா? போலீஸ் விசாரணை
கேரளா, 16 மார்ச் (ஹி.ச.) கேரள மாநிலம் திருவனந்தபுரம் கவடியார் பகுதியில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் வசிக்கும் பிரமாண்ட அரண்மனை உள்ளது. கடந்த 1934-ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னராக இருந்த பாலராம வர்மா இந்த அரண்மனையை கட்டியுள்ளார். 3 மாடி
திருவிதாங்கூர் அரண்மனை


கேரளா, 16 மார்ச் (ஹி.ச.)

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கவடியார் பகுதியில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் வசிக்கும் பிரமாண்ட அரண்மனை உள்ளது.

கடந்த 1934-ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னராக இருந்த பாலராம வர்மா இந்த அரண்மனையை கட்டியுள்ளார்.

3 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் 150-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.

ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உணவருந்தும் வகையில் மிகப்பெரிய அறையும் இருக்கிறது.

தற்போது இங்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். பார்வையாளர்கள் யாருக்கும் இங்கு அனுமதி இல்லை.

இந்த நிலையில் இங்குள்ள ஒரு அறையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள ரத்தின கற்கள், மரகத மாலைகள், வைரங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால் இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் கொடுக்காமல் அரண்மனைக்குள்ளேயே மன்னர் குடும்பத்தினர் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால் பல கட்ட விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்காததால் இது குறித்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த கவுரி லட்சுமி பாய் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் பேரூர்க்கடை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பார்வையாளர்கள் யாருக்கும் இங்கு அனுமதி கிடையாததால் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முதலில் ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அதே சமயத்தில் அரண்மனைக்கு வந்தவர்கள் யார்? யார்? என்பது குறித்த விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

பாதுகாப்பு மிகுந்த மன்னர் அரண்மனையில், நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / GOKILA arumugam