Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மார்ச் (ஹி.ச.)
நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றபோது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கின் விசாரணை மாநில காவல்துறையிடமிருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன்படி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
அதோடு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு, சிபிஐ விசாரணையை கண்காணித்து வருகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் மூன்றாவது முறையாக கடந்த 10ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்குப் புதிதாகச் சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், அன்றைய தேதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தோரிடம் நேர்காணல் நடத்த திட்டமிட்டிருந்தால் ஆஜராகுவதற்கு அவகாசம் வேண்டும் என்று விஜய் தரப்பு சிபிஐயிடம் கோரிக்கை வைத்திருந்தது.
அவரின் கோரிக்கையை ஏற்று நேற்று (15.03.2026) டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பிருந்தது. அதன்படி, விசாரணைக்கு ஆஜராகுவதற்காக நேற்று முன்தினம் (14.03.2026) சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு விஜய் புறப்பட்டுச் சென்றார்.
அதன்படி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று காலை 10:30 மணியளவில் விஜய் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் 3வது முறையாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அந்த வகையில் விசாரணை மாலை 05:30 மணி வரை என சுமார் 7 மணி நேரம் நடைபெற்றது. அதன் பின்னர் சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் சி.பி.ஐ. மற்றும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகிக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையைச் சென்னையில் நடத்த வேண்டும். ஏற்கனவே மூன்று முறை டெல்லிக்குச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விசாரணைக்கு ஆஜரான நிலையில் மேலும் விசாரணையைத் தொடர்ந்தால் அதனைச் சென்னையிலேயே நடத்த வேண்டும்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர் நேர்காணல் உள்ளிட்ட தேர்தலுக்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளதால் இனிமேல் விசாரணையைச் சென்னையில் நடத்த வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன்.
இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b