Enter your Email Address to subscribe to our newsletters

புதுடல்லி, 16 மார்ச் (ஹி.ச.)
மேற்கு ஆசிய நாடுகளில் நடைபெற்று வரும் போரின் காரணமாக, டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேற்று (மார்ச் 15) இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள் அறிவித்தன. இவை அனைத்தும் நள்ளிரவு முதலே அமலுக்கு வந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக துபாய் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயணக் கட்டணத்தை பயணிகள் முழுமையாக திரும்ப பெற்றுகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரான் முதற்கட்டமாக பெரியளவில் பாதிப்படைந்த போதிலும், தொடர்ந்து பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.
குறிப்பாக மேற்கு ஆசிய பகுதியில் உள்ள அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதலை விரிப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் முடக்கியுள்ளது.
இதன் காரணமாக சர்வதேச அளவில் எரிப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் விமான நிலைய அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, இன்று இந்தியாவில் இருந்து செல்லும் விமானங்கள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் துபாய் செல்லும் விமானங்கள் ஒன்றை தவிர அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவில் டெல்லி - துபாய் செல்லும் 5 விமானங்களில் 1 மட்டும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டெல்லி - துபாய் செல்லும் 6 விமானங்களில் 1 மட்டும் இயக்கப்படுகிறது.
அபுதாபிக்கான அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷார்ஜாவில் இருந்து டெல்லி, கன்னூர், கொச்சி, கோழிக்கோடு, மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்படுகிறது.
மேலும், ராஸ் அல் கைமா - கோழிக்கோடு மற்றும் ராஸ் அல் கைமா - கொச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்படுகிறது.
இதுவும், இருக்கை இருப்பு மற்றும் அப்போதைய நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயணிகள் மற்றும் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சேவையினால் பாதிக்கப்பட்டவர்கள், கட்டணமின்றி வேறு தேதிகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் அல்லது டிக்கெட்டிற்கான முழு கட்டணத்தையும் திரும்பி பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனமும் துபாய் செல்லும் விமானங்களை குறைத்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட சேவைகளுக்கான விவரங்கள் வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவும் விவரங்கள் தெரிவிக்கப்படுவதாக இண்டிகோ நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN