விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு - காவல் துறையினர் 11 பேருக்கு சிபிசிஐடி சம்மன்
மானாமதுரை, 17 மார்ச் (ஹி.ச.) மானாமதுரையில் ஜெயக்குமார், அழகர் ஆகிய இருவரும் வாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் கைது செய்யப்பட்டார். போலீஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது இவருக்கு கால் முறிவு ஏற்பட்டு,
விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு - காவல் துறையினர் 11 பேருக்கு சிபிசிஐடி சம்மன்


மானாமதுரை, 17 மார்ச் (ஹி.ச.)

மானாமதுரையில் ஜெயக்குமார், அழகர் ஆகிய இருவரும் வாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் கைது செய்யப்பட்டார்.

போலீஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது இவருக்கு கால் முறிவு ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர் கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்தார்.இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

பின்னர், இந்த விவகாரத்தில் மானாமதுரை காவல் நிலையத்தில் பொறுப்பு ஆய்வாளராகப் பணியாற்றிய திலீபன், உதவி ஆய்வாளர் குகன், போலீஸார் தெய்வேந்திரன், காளீஸ்வரன், சரத்குமார், மனோகரன் ஆகிய 6 பேர் கடந்த வெள்ளிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, மானாமதுரை காவல் ஆய்வாளர் குமாரவேல் பாண்டியனை, நெல்லை காவல் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திரபிதாரி உத்தரவிட்டார்.

இதேபோல, தனிப்பிரிவு காவலர் முனீஸ், மதுரை மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கு தொடர்பாக டிஎஸ்பி உள்ளிட்ட 11 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.

இதன்படி மானாமதுரை டிஎஸ்பி ராஜா, தனிப்பிரிவு எஸ்.ஐ. முத்துராஜா, காவலர் முத்துப்பாண்டி உள்ளிட்ட 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணையின் அடிப்படையில் டிஎஸ்பி உள்ளிட்டோரை வழக்கில் சேர்ப்பது குறித்து முடிவுசெய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Hindusthan Samachar / vidya.b