Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 மார்ச் (ஹி.ச)
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வரும் 30ஆம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது.
ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் ஆளும் தி.மு.க. 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் (28), மதிமுக (4), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), மனிதநேய மக்கள் கட்சி (2), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (2) ஆகிய 5 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.
எஞ்சிய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு கடந்த மாதம் 20ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 15 ஆயிரத்து 372 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேர்காணல் நடத்தி வருகின்றார்.
இன்று தொடங்கி 22ம் தேதி வரை வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
இன்று காலை முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் இந்த நேர்காணலில் புதுச்சேரி, காரைக்கால் வேட்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
நாளை மார்ச் 18 ஆம் தேதி காலை 9 மணிக்கு தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களுக்கும், நாளை மதியம் மதுரை, தேனி, விருதநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளது.
நாளை மறுநாள் மார்ச் 19 ஆம் தேதி காலை கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கும், அன்றைய தினம் மாலை திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் நேர்காணல் நடைபெறவுள்ளது.
மார்ச் 20 ஆம் தேதி காலை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும், அன்றைய தினம் மாலை தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளது.
மார்ச் 21 ஆம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கும், மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளது.
மார்ச் 22 ஆம் தேதி காலை கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும், திருவள்ளூர், சென்னை, மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளது.
Hindusthan Samachar / vidya.b