Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 மார்ச் (ஹி.ச.)
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் கற்பகம். இவர் ராமாபுரம் துணை மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 13 ஆம் தேதி பராமரிப்பு பணிக்காக ராமாபுரம் திருமலை நகர், வள்ளுவர் சாலை, ராயலா நகர், நடராஜன் சாலை, பெரியார் சாலை, பாரதி சாலை, பொன்னுரங்கம் சாலை போன்ற பகுதிகளில் மதியம் 2 மணி முதல் மணியிலிருந்து 2.11 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அப்போது கற்பகத்தின் போனிற்கு பேசிய அடையாளம் தெரியாத நபர் மின்சாரம் தடை செய்யப்ட்டது தொடர்பாக ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.
இணைப்பை துண்டித்த கற்பகத்திற்கு மற்றொரு எண்ணில் இருந்து அழைத்து அந்த நபர் மீண்டும் ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.
இது குறித்து கற்பகம் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆபாசமாக திட்டிய நபரின் ஆடியோக்களை போலீசாரிடம் அவர் கொடுத்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.
போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ராமாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி செல்போன் எண்ணை கொண்டு தீவிர விசாரணை செய்து, ராமாபுரத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்த் என்பவரை நேற்று (16.03.2026) கைது செய்தனர்.
அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட லட்சுமிகாந்த் விசாரணைக்குப் பின்னர், நேற்று (16.03.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ