Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தேதியில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் ஆளும் தி.மு.க தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதில் காங்கிரஸ், மதிமுக, கொ.ம.தே.க, ஐ.யு.எம்.எல், உட்பட 5 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இருப்பினும் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதலான தொகுதிகள் ஒதுக்க முடியாது என்று திமுகவும், தங்களுக்கு கூடுதலான தொகுதிகள் வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து அழுத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையிலான பேச்சுவார்த்தை குழு திமுகவுடன் மூன்றாவது கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தொகுதி உடன்பாடு குறித்து திமுக தொகுதி பங்கிட்டு குழுவுடன், மூன்றாவது கட்டமாக பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை திமுக பேச்சுவார்த்தை குழு உடன் தெரிவித்தோம்.
அனால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எங்களின் கோரிக்கை குறித்து முதல்வரிடம் கலந்து பேசி இன்று இரவுக்குள் தெரிவிப்பதாக சொல்லி உள்ளனர்.
வரும் ஓரிரு நாட்களுக்குள் தொகுதி சம்பந்தமான உடன்பாடு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். கூடுதல் தொகுதிகளை பெறுவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம். அவரவர்கள் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை கூடுதலாக கேட்டுப் பெறுவது அவர்களுடைய உரிமை.
அந்தவகையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாங்கள் ஒன்றும் தேர்தலை புறக்கணிக்கும் கட்சி அல்ல.
கூடுதல் தொகுதிகளை விட குறைவாக ஒதுக்கினால், மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b