Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 17 மார்ச் (ஹி.ச.)
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அதே சமயம், தேர்தல் காலத்தில் ஊடகங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க 'மாவட்ட ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு' அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் மூலம் ஊடக விதிமீறல்கள் மற்றும் போலிச் செய்திகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்னதாக இக்குழுவிடம் முறையான சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயமாகும்: தொலைக்காட்சி, கேபிள் டிவி, வானொலி மற்றும் சமூக ஊடகங்களில்
(Social Media) வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு முன்சான்றிதழ் அவசியம்.
வாக்குப்பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தைய நாளில் செய்தித்தாள்களில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கும் அனுமதி பெற வேண்டும். ஒட்டுமொத்தக் குறுஞ்செய்திகள்
(Bulk SMS) மற்றும் குரல் வழிச் செய்திகளுக்கும்
(Voice Messages) முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முன்சான்றிதழ் இல்லாமல் வெளியிடப்படும் விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிமீறலாகக் கருதப்படும். தவறான தகவல்களைப் பரப்புதல் அல்லது போலிச் செய்திகளை உருவாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் எச்சரித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b