Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 17 மார்ச் (ஹி.ச.)
இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026, வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான சிறப்புப் பிரச்சார வாகனத்தை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் இன்று (மார்ச் 17) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகன சேவை வாயிலாக 100% தவறாமல் வாக்களிப்போம் வாரீர் என்ற வாசகத்துடன் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வாக்குக்கு பணம் இல்லை போன்ற வாசகங்கள் மூலம் நேர்மையான தேர்தலை வலியுறுத்துகிறது. தேர்தல் விதிமீறல்களைப் புகாரளிக்க cVIGIL செயலி மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் 1950 என்ற உதவி எண் குறித்த விவரங்கள் வாகனத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களுக்குச் சென்று, வாக்களிப்பதன் அவசியம் மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வின் போது அரசு அலுவலர்கள் மற்றும் தேர்தல் பிரிவு பணியாளர்கள் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b