Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 மார்ச் (ஹி.ச.)
இன்ஸ்டாகிராம் அதன் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட செய்தி பரிமாற்ற வசதியை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் தாய் நிறுவனமான மெட்டா உறுதிப்படுத்திய இந்த மாறுதல், வரும் மே 8-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட குறுஞ்செய்தி அனுப்பும் முறையின் வாயிலாக அனுப்புனரும் பெறுனரும் மட்டுமே அனுப்பிய செய்தியை காண முடியும் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு பாதுகாப்பு முறையாகும்.
இன்ஸ்டாகிராம் அதன் அனைத்து செயல்பாடுகளிலும் ஒருவரின் அந்தரங்கத்தை பாதுகாத்து பலப்படுத்தும் எண்ணத்துடன் இந்த எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் முறையினை சென்ற டிசம்பர் 2023-ல் அறிமுகம் செய்தது. இப்படியிருக்கையில் இந்த வசதியை நீக்க மெட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இனி இரண்டு நபர்களுக்குள் அனுப்பப்படும் செய்தியினை சம்பந்தப்பட்ட நிறுவனமும் அறிந்துகொள்ள முடியும். ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படும்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட செய்தியின்படி, எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் உரையாடல்களை வைத்திருக்கும் பயனாளர்கள் நோட்டிபிகேஷன்களை பெறுவார்கள் என்றும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு முன்பாக அவர்கள் வைத்திருக்க விரும்பும் டேட்டாவை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பயனாளர்களிடையே விவாதம் எழுந்துள்ளது. இணைய ஊடுருவல்காரர்கள் அல்லது கண்காணிப்பிலிருந்து ஒருவரின் தனி உரிமையை காப்பாற்றும் வசதியை நீக்குவது அபத்தமானது என தெரிவித்துள்ளனர்.
அதே சமயத்தில், சில நாடுகளின் அரசு அமைப்புகளும் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்தி அனுப்புதல், சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அல்லது இணையத்தில் கெடுதல் விளைவிக்கும் தகவல்களை கண்டுபிடிப்பதை சிரமமாக்குவதாக கூறியுள்ளனர்.
ஆகையால் இதனை நீக்கும் இன்ஸ்டாகிராமின் முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கது எனவும் கூறியுள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM