நீங்கள் யாருடைய பக்கம் இருக்கிறீர்கள்? - இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் கேள்வி
டெஹ்ரான், 17 மார்ச் (ஹி.ச.) ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் கூறி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. தலைநகர் டெஹ்ரானை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா
நீங்கள் யாருடைய பக்கம் இருக்கிறீர்கள்? - இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் கேள்வி


டெஹ்ரான், 17 மார்ச் (ஹி.ச.)

ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் கூறி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

தலைநகர் டெஹ்ரானை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றோடு நட்புறவு கொண்டுள்ள கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் ராணுவம் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது.

வளைகுடா பிராந்தியம் முழுவதும் இரண்டு வாரங்களுக்கும் மேலாக பெரும் பதற்றத்தில் மூழ்கியிருக்கும் ஈரான் போர், தற்போது ஓய்வதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. மாறாக, நாளுக்கு நாள் தீவிரமடையும் நிலையையே காட்டுகிறது.

இந்நிலையில், நீங்கள் யாருடைய பக்கம் இருக்கிறீர்கள்? என்று இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தொடர்ச்சியான வஞ்சகத் தாக்குதல்கள் குறித்து இஸ்லாமிய நாடுகள் மௌனம் காப்பது வேதனையளிக்கிறது. உதவி கேட்டு வரும் சக முஸ்லிமுக்குத் தோள் கொடுக்காதவன் முஸ்லிமே அல்ல என்பது நபியின் வாக்கு. ஆனால், எதிரிகளால் இந்த இக்கட்டான சூழலில் சிக்கிக் கொண்ட ஈரானிய மக்களுடன் எந்த நாடும் துணை நிற்கவில்லை.

ஈரானைத் தாக்க அனுமதித்துவிட்டு, பதிலுக்கு அமெரிக்கத் தளங்களைத் தாக்கினால் எங்களை எதிரி என்பதா? ஈரான் வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா? நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். பிராந்தியத்தின் எதிர்காலத்தை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்.

என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM