Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 17 மார்ச் (ஹி.ச)
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறியுள்ள நிலையில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
மீதமுள்ள 14 தொகுதிகளை பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி பிரித்துகொள்ள உள்ளதாக பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்திருந்தார்.
இதில் பாமக-வுக்கு இடம் ஒதுக்காததால் பாமக 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மாரட்டின் கட்சியான லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என ரங்கசாமி வலியுறுத்தி வருகிறார்.
இச்சூழலில் நேற்று இரவு மத்திய அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியாவை என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், பொதுச்செயலர் ஜெயபால் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சந்தித்தனர். ஆனால், முதல்வர் ரங்காமி அவரை சந்திக்கவில்லை.
தொடர்ந்து அமைச்சர்,
கொறடா தரப்பில், தங்கள் தலைவரின் லட்சிய ஜனநாயக கட்சி எதிர்ப்பை தெரியப்படுத்தினர். காரசாரமாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று காலை மீண்டும் பேசுவோம் என்று புறப்பட்டனர்.
என்.ஆர்.காங்கிரஸ் தரப்பிலோ லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்த்தால் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று தெரியப்படுத்தியுள்ளனர்.
இச்சூழலில் இன்று காலை 9 மணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் தரப்புக்காக பாஜகவினர் காத்திருந்தனர்.
இரண்டு மணி நேரம் ஆகியும் வராததால் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத் தலைவர் செல்வம், மாநிலத் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டனர்.
தொகுதியில் போட்டியிட விரும்பும் பாஜகவினர் அடங்கிய பட்டியலை மேலிடத்துக்கு தந்து தற்போதுள்ள என்.ஆர்.காங்கிரஸ் நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளனர்.
இதனால் பாஜக - என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b